இயற்கை விவசாயம் – தேவையும் சவால்களும்

( அறிவுத்தோட்டம் கு.செந்தமிழ் செல்வன் )

இயற்கை விவசாயம்: இயற்கை விவசாயம் பல விவசாயிகளை ஈர்க்கும் சக்தியாக வளர்ந்து வரும் கட்டத்தில் அது குறித்து நாம் தெளிவாக புரிந்து கொள்வதும் பரவலாக விவாதிப்பதும் அவசியமாகிறது. இயற்கை விவசாயத்தை செயல் படுத்த முறையான வழிமுறைகள் விவசாயிகளுக்கு விளக்கப் பட வேண்டும். அரசின் பங்கேற்புடன் இயற்கை விவசாயத்தை ஆதரிக்கவும், நிலைப்படுத்தவும் பரவலாக்கவும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இயற்கை விவசாயத்தின் அவசியம் என்ன? 50 ஆண்டுகளுக்குப் முன்பாக அரசு இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வீரிய வித்துக்களும் பயன்படுத்த வலியுறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. விவசாயத்தில் ஏற்பட்ட இந்த பெரும் மாற்றங்களில் விவசாயிகளும் பங்கேற்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உற்பத்தியினை அதிகப்படுத்த துவக்கத்தில் உதவினாலும் அதன் பின் விளைவுகளைத் தற்போது வெகுவாக உணருகிறோம்.

இரசாயன உரங்களும் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளும் நிலத்தின் நுண்ணுயிர்களை அழித்து மலட்டுத்தன்மைக்கு கொண்டு வந்துள்ளது. . நம் மண்ணுக்கு பொருந்தாத வீரிய வித்துக்களும் ஏராளமான நீரை உறிஞ்சியும் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொண்டு வந்தும் நிலத்தை அழித்துள்ளது. சூழலற்ற நிலையில் கால்நடைகளும் விவசாயிகளிடம் குறைந்து விட்டன.

இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் கொண்டு உற்பத்தியாகும் நெல், தானியங்கள், காய் கனி வகைகளில் நச்சுக்கள் நீக்க முடியாததாக தங்கிவிடுகின்றன. எனவே, நச்சு கலந்த உணவினையே மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். மழை வெள்ளங்கள் மூலம் நிலத்தின் நீர் பல நீர்நிலைகளிலும் கடலிலும் கலந்து மீன் போன்ற உயிரினங்களிலும் நச்சை சேர்க்கிறது. தூய்மையான உணவாக குழந்தைக்குக் கொடுக்கப்படும் தாய் பாலிலும் நச்சு கலந்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தியினை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் வாழ்விலும் முன்னேற்றமின்றி, பெரும்பாலான நிலங்களும் மலடுத்தட்டு போகும் நிலையில், கால்நடைகள் மற்றும் பிற பயிர்காக்கும் நுண்ணுயிர்கள் அழிந்து நல் சூழல் அழியும் கட்டத்தில் , உணவே மருந்தாக வாழ்ந்த நாட்டில் உணவின் நச்சே பல நோய்களுக்கு வழிவகுக்கும் அழிவின் எல்லையில், நாம் மாற்று/தீர்வு கண்டாக வேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம்.

இந்தச் சூழலில்தான் இயற்கை விவசாயம் முன் வைக்கப்படுகிறது.

இயற்கை விவசாயம் பல மாநிலங்களில் வெற்றியினை நிரூபித்துள்ளது. சிக்கிம் மாநிலம் முழு இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம் சாத்தியப்படுத்தி உலகத்தின் நற்சான்றிதழ் பெற்றுள்ளது. கர்நாடகாவில் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம் விரிவடைந்துள்ளது. கேரள மாநிலத்திலும் மிகப் பெரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ் நாட்டிலும் பரவலாக இயற்கை விவசாயம் இடம் பிடித்து வருகிறது. பல சவால்களைச் சந்தித்தாலும் இயற்கை விவசாயம் வரவேற்பையும் வெற்றியினையும் பெற்று வருகிறது.

இயற்கை விவசாயத்தின் பயன்கள் என்ன?

இயற்கை விவசாயம் தொடர்ந்து செய்யும் போது :

♦ மண்ணில் தங்கிவிட்ட நச்சுக்கள் படிப்படியாக நீக்கப்படுகின்றன.

♦மண் உயிர்ப்பு பெறுகிறது.மண்ணில் நுண்ணூயிர்கள் பெருகுகின்றன.

♦தேவையான இயற்கை உரங்களை தாங்களே தயாரித்துக் கொள்வதால் இடுபொருள் செலவு குறைகிறது.

♦மகசூல் அதிகரிக்கிறது.

♦பயிர்களை அழிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறன.

♦சூழல் காக்கப்படுகின்றன.

♦கால்நடைகள் மீண்டும் விவசாயத்துடன் இணைக்கப்படுகின்றன.

♦தண்ணீர் தேவை குறைகிறது. சொட்டுநீர் பயன்படுத்தும் போது நீர் மேலாண்மை சிறக்கிறது.

♦நச்சில்லாத தராமான விவசாய விளைச்சல்களை சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் வழங்க முடியும்.

♦விளை பொருளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

♦தரமான விளைபொருட்களை ஏற்றுமதிக்கும் தகுதிபடுத்துகிறது.

இயற்கை விவசாயம் என்பது என்ன?

♦இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொள்ளிகள் தவிர்த்த இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் கொண்டு செய்யப்படும் விவசாயம். இது ஒரு அறிவியலார்ந்த விவசாய முறை.

♦நமது விவசாயிகளின் பாரம்பரிய அறிவினையும் இன்றைய அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களையும் தேவையான அளவு இணைத்து பல்லுயிர் பெருக்கத்துடன் சூழல் காக்கும் விவசாய முறை.

♦இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள், பயிர் சுழற்சி, பருவத்துக்கும் மண்ணிற்கும் ஏற்ற சாகுபடி, பாரம்பரிய விதைகள், ஊடு பயிர், கால்நடைகளின் இணைப்பு, மூடாக்கு, சொட்டு நீர் பாசனம் , பண்ணைக் குட்டை போன்ற நீர் மேலாண்மை முறைகள், டிராக்டர் போன்ற நவீன விவசாயக் கருவிகள்/ இயந்திரங்கள் பயன்பாடு, இரசாயனங்களின்றி இயற்கை வழி பழங்களை பழுக்க வைக்கும் முறை, மண்/ நீர் பரிசோதனை, பூச்செடிகள் , மூலிகைச் செடிகள், மரங்கள், இவைகள் அனைத்தும் இணைந்து உருவாக்குவதே இயற்கை விவசாயம்.

இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் எவைகள் பயன்படுத்தப்படுகிறது?

♦குப்பைகள், தழைகள் மக்க வைத்த உரம்

♦ அமுத கரைசல்

♦பஞ்சகாவியா

♦மீன் கரைசல்

♦ மண்புழு உரம்

♦அசோலா

♦கடல் பாசி உரம்

♦கடலை/ வேப்பன் புண்ணாக்கு

♦தங்களது அனுபங்கள் மூலம் தங்களது பகுதிகளில் கிடைப்பவைகளைக் கொண்டே மேலும் பல வகையான இயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர்

பூச்சி விரட்டி:

தொட்டால் வாசனை அடிக்கும்,,தின்றால் கசக்கும் ஒடித்தால் பால் வடியும் செடி/மரங்களின் இலைகளுடன் கோமியம் கலந்து பத்து நாட்கள் ஊரவைத்து தாயாரிக்கப்படுகிறது. தங்கள் பகுதிகளில் கிடைப்பவைகளைக் கொண்டே தயாரிப்பதால் இதன் செலவும் குறைவு பெறுவதிலும் சிரமமில்லை.

இயற்கை விவாசாயம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? ♦எந்த ஒரு மாற்றமும் எளிதில் நிகழ்ந்துவிடுவதில்லை. பல சவால்களைக் கடந்தே மாற்றங்கள் நிலை கொள்ளும். விவசாயி,வியாபாரி மற்றும் நுகர்வோர் என மூவருமே பல கேள்விகளுடன் அணுகுகின்றனர்.

♦விவசாயி: மாற்றம் சாத்தியமா? கூடுதல் மகசூல் கிடைக்குமா? லாபகரமாக நடத்த முடியுமா? சிரமமின்றி விற்பனை செய்ய இயலுமா? இவை அனைத்திற்கும் “ஆம்” என்ற பதிலையே அனுபங்கள் சொல்கின்றன.

♦வியாபாரி: இயற்கை விவாசயத்தில் விளைந்தது என்று எப்படி ஏற்பது? சான்றிதழ் இன்றி எவ்வாறு வாங்குவது? மக்கள் கூடுதல் விலைக்கு வாங்கிவார்களா? மக்கள் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து கிடைக்குமா? பல நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், இன்று இயற்கை விவசாயம் பெருகுவதற்கு காரணமாக இருப்பது “ சந்தை “ தான்.

♦நுகர்வோர்: இயற்கை விவசாய பொருள்தானா? ஏன் விலை கூடுதலாக விற்கிறார்கள்?.சான்றிதழ் அனைத்திற்கும் தர இயலுமா?இவைகளில் உண்மையில் வேறுபாடு உள்ளதா? “வியாபாரம்” நுழையும் போது அனைத்து ஏமாற்று வேலைகளும் நடக்கத்தான் செய்கிறது.

நுகர்வோருக்கும் விவசாயிகளுக்குமான நேரிடையான தொடர்பினை பல அமைப்புகள் செய்து வருகின்றன. அரசின் ஒத்துழைப்புடன் இயற்கை விவசாயம் பலமடங்கு பெருகும் போது இந்த இடர்பாடுகள் காணாமல் போகலாம். புதிய வழி முறைகளும் அப்போது உருவாகும்.

நாம் என்ன செய்யலாம்?

♦ இயற்கை விவசாயம் குறித்து பரவலான ஒரு விவாதத்தை விவசாயிகளிடையே நடத்த வேண்டும்.

♦தேவையான பயிற்சியினை விவசாயிகளுக்கு அளித்திட வேண்டும். இயற்கை விவசாயம் வழிமுறைகள், இயற்கை உரங்கள்/ பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, கால்நடைகள் பராமரிப்பு இவைகளை உள்ளடக்கி பயிற்சிகள் தேவை.

♦ அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சி கொடுத்திட அரசின் உதவி அவசியம். இதனை அரசிடம் கோரிப் பெற வேண்டும். உரங்கள் தயாரிக்க, கால் நடைகள் வாங்க குறுங்கடன்கள் மானியத்துடன் கிடைக்க அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.

♦இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனைக்கு தனியான சிறப்புச் சந்தைகள் பரவலாக உருவாக்கப்பட வேண்டும். விளைந்த பொருட்களை சந்தைக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்ல அரசு தனி வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.

♦மக்களிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வினை அரசுடன் இணைந்து நடத்த வேண்டும்.


மக்கள் நலச் சந்தை


மக்கள் நலச் சந்தை எப்படி செயல்படுகிறது?

“நம் மக்களுக்கு நச்சில்லா உணவு கொடுப்போம்”

இது விற்கும் இடமல்ல……. கற்கும் களம்

♦ இயற்கை விவசாயிகளும் நுகர்வோர்களும் நேரடியாகச் சந்தித்து விற்பனை செய்து கொள்ளும் இடம் மக்கள் நலச் சந்தை (Makkal Nala Santhai- people welfare Market)

♦ கவுரமான விற்பனையில் நியாயமான விலையில் விவசாயிகளுக்கும், நம்பகமானபொருட்களை நிலத்திலிருந்து நேரடியாக நுகர்வோர்களுக்கும் கிடைக்க வழிவகைச் செய்துள்ள தனித்துவமான சந்தை

♦ இயற்கை விவசாய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் . நாட்டுப்பால், நாட்டுக் கோழி & முட்டை, தேன், வேர்கடலை, சிறு தானியங்கள், மஞ்சள், நெல்லி, பாரம்பரிய அரிசி வகைகள் பாக்கு மட்டை தட்டுகள், துணிப்பைகள் போன்ற சூழல் காக்கும் பொருட்கள் என பலவும் விற்பனைக்குக் கிடைக்கும்

♦ இயற்கை விவசாயப் பொருட்கள் மதிப்புக் கூட்டுதல் செய்துவரும் தொழில்முனைவோர்களும் தங்கள் பொருட்களை அவர்களே விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்

♦ ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூரில் நடைபெறுகிறது

♦ நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது

♦ மக்கள் நலச் சந்தையினைத் துவக்கி வைத்தவர் மரியாதைக்குரிய விஐடி பல்கலைகழகத்தின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் அவர்கள்

♦ தொடர்ந்து இதுவரை 25 மாதங்கள் நடைபெற்றுள்ளது

♦தற்போது வாரச் சந்தையும் துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அசோக் பிளான்ட் நர்சரி நான்காவது கிழக்கு பிரதான சாலையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 77 வாரங்கள் நடைபெற்றுள்ளன.

♦ மக்கள் நலச் சந்தையில் இணைப்பில் உள்ள தொழில் முனைவோர்களாக உள்ள பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் தொழில் முனைவோர் இணையம் ( WAN- Women Agripreneur Network ) உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பிற நிறுவனங்களில் இவர்களுக்கு சந்தை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்படுகிறது. இவர்களின் ஒருங்கிணைப்பில் ஆக்சிலியம் கல்லூரியில் ஆர்கானிக் அப்( Auxilium Organic Hub) கல்லூரி மாணவிகளுக்கு நச்சில்லா நொறுக்குத் தீனிகள் வழங்கி வருகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்களில் இத்தகைய ஸ்டால்கள் அமைக்க உள்ளனர்.

♦ மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்புக் குழு :

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இயற்கை ஆரவலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளைக் உள்ளடக்கிய குழு இந்த சந்தையினை வழி நடத்துகிறது. இலாப நோக்கின்றி இந்த சந்தை நடை பெறுகிறது.

♦ மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுபவர் திரு. கு.செந்தமிழ் செல்வன். ஏற்கனவே, நான்கு ஆண்டு காலமாக செயல்படும் “நம் சந்தை”யினை துவக்கி நடத்தியதில் பெருங்காற்றியவர்

♦இயற்கை விவசாயிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருபவர். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். அறிவுத்தோட்டம் எனும் இயற்கை விவசாயப் பண்ணையினை கடந்த 12 ஆண்டுகளாக பராமரித்து வருபவர்

♦ விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள் விற்பனைச் செய்த முழுத்தொகையுடன் வீடு செல்கின்றனர்

இயற்கை விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் கவனத்திற்கு:

♦ இயற்கை விவசாயிகள் விற்பனை செய்ய பதிவு செய்து கொள்ளப்படுவார்கள்

♦ இயற்கை விவசாயி என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. மக்கள் நலச் சந்தை குழுவினர் நிலத்தினைப் பார்வையிட்டு உறுதி செய்வார்கள்

♦ பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதியில்லை

♦ மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்புக் குழு பொதுவாக விலை நிர்ணயம் செய்யும். உழவர் சந்தை விலையுடன் 20% கூடுதலாக விற்கப்படும்

♦ தங்களது நிலத்தின் உற்பத்தியினை மட்டும் கொண்டு வரவேண்டும். பிறருடைய பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யக் கூடாது

♦ நிலத்திலிருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருக்கக் கூடாது

♦ தொழில்முனைவோர் இயற்கை விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டிக் கொண்டு வரலாம்

♦ தங்களது உற்பத்திகளை மட்டுமே விற்கலாம். பிராண்டு இருப்பின், அந்த பிராண்டு தவிர பிற தயாரிப்புகளை கொண்டு வரவோ, விற்கவோ கூடாது.

♦ சந்தையில் நுகர்வோர்களுக்கு மட்டுமே விற்கலாம்

♦ சக ஸ்டாலர்களுடன் இணக்கமான போக்கு வேண்டும்

♦ புதிய இயற்கை விவசாயிகளை புதிய தொழ்ல்முனைவோர்களை தொடர்பு படுத்த வேண்டும்

நுகர்வோர்களின் கவனத்திற்கு: ♦ தரமான, புதிதான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். இயற்கை விவசாயப்பொருள் என்பதை நம்பிக்கையுடன் வாங்கிச் செல்லாம்

♦ நச்சில்லா உணவினை உங்கள் குடும்பத்தாருக்கு கிடைக்க இது சிறந்த ஏற்பாடு

♦ இயற்கை விவசாயிகள் நிலங்களை நேரடியாகப் பார்வையிடவும் ஏற்பாடு செய்கிறோம்

♦ விவசாயிகளுடன் பேரம் வேண்டாம்

இயற்கை விவசாயப் பொருட்களுக்கான பிரச்சாரம்: இயற்கை நேசிப்பே இயற்கை விவசாயம் என்ற கோட்பாட்டில் மக்களை அணிதிரட்டும் பணி சேர்ந்தே நடைபெறுகிறது

♦ பல ஆண்டு காலமாக மூளை சலவைச் செய்யப்பட்டு இரசாயன உரங்கள் / பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்றப்பட்டவைகளுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளோம். இதன் விளைவுகளையும் மாற்றுகளை முன் வைப்பதும் மக்கள் நலச் சந்தையின் அடிப்படை வேலையாகச் செய்கிறோம்

♦ வாட்ஸ் ஆப் குழுக்கள், முக நூல்கள் வழி சந்தைத் தகவலுடன் விழிப்புணர்வுக் கருத்துக்களும் கொண்டு செல்லப்படுகின்றன். மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது

அடுத்த நகர்வுகள்: ♦ இயற்கை விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க கிராமம் தோறும் ” மண் நல மையம்” துவக்கப்பட்டு வருகிறது.தற்போது கீழ் வெங்கடாபுரம், குடிமல்லூர், மோத்தக்கள், காளாம்பட்ட்டு ஆகிய கிராமங்களில் செயல்படுகிறது ♦ வேலூர் காந்தி நகர் பகுதி மட்டுமல்லாது வேலூரைச் சுற்றி பல மையங்களில் சந்தைகள் துவக்க திட்டமிடப்படுகிறது

மக்கள் நலச் சந்தை அனுபவங்கள்: தரமான நச்சில்லா இயற்கை விவசாயப் பொருட்களுக்கு மக்களிடம் ஆதரவுப் பெருகி வருகின்றன. அவர்களுக்கு தெளிவு படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட வேண்டியுள்ளது.

சந்தை ஒரு தொடர்பு மையமாக விவசாயிகள்- தொழில்முனைவோர்கள்- நுகர்வோர்கள் நெருக்கமாக செயல்பட வழிவகுக்கிறது.

விவசாயத்தைப்பற்றிய மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து வருகிறது. காய்கறிகளுக்கான விலையினை விவசாயி நிர்ணயிக்க வேண்டியதின் அவசியத்தை உணைர்ந்து வருகின்றனர்.

பல பகுதிகளில் நேரடி விற்பனை மையங்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் நலச் சந்தையின் அனுபவங்கள் அடிப்படியில் மாநில அரசும் வேளாண் வணிகத்துறையின் வழியாக விற்பனை மையங்களைத் துவக்க கோரிவருகிறோம்.

இயற்கை ஆர்வலர்கள்,இயற்கை விவசாயிகள் தங்களது பகுதியில் மக்கள் நலச் சந்தையினை முன் மாதிரியாகக் கொண்டு துவக்குவதற்கும் வழிகாட்டத் தயாராக உள்ளோம்.

”மக்கள் நலச் சந்தை செய்திகள் ” வாட்ஸ் ஆப் குழுக்கள் மூன்று இயங்கி வருகிறது. தொடர்ந்து இயற்கை விவசாய பொருட்களின் சந்தை குறித்து அறிய கீழ்கண்ட இணைப்பின் வழி இணையலாம்.

https://chat.whatsapp.com/JkwUXVJcvIfBvv3ig7C7CW அல்லது கீழ்கண்ட என்னுடைய எண்ணிற்கு வாட்ஸ் ஆப் வழி செய்தி அனுப்பினாலும் இணைக்க இயலும். தங்களோடு தொடர்புடையவர்களையும் இணையுங்கள்.


மேலும் விவரங்களுக்கு: திரு. கு.செந்தமிழ் செல்வன்( ஒருங்கிணைப்பாளர்), 94430 32436.
Makkal nala santhai news link : https://chat.whatsapp.com/JkwUXVJcvIfBvv3ig7C7CW

மக்கள் நலச் சந்தையின்

விவசாய தொழில் முனைவோர் மகளிர் இணையம்



நோக்கம்:

♦இயற்கை விவசாயப் பொருட்களில் மற்றும் சூழல் காக்கும் பொருட்களில் மதிப்புக்கூட்டுதலில் ஈடுபடும் மகளிர் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைப்பது

♦தொழில் முனைவோர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளை தொடர்ந்து அளிப்பது. பெண்களை ஆற்றல்படுத்துவது

♦மதிப்புக் கூட்டுதலுக்கான பொருட்களுக்கு வழிகாட்டுவது

♦உற்பத்தி செய்த பொருட்களுக்கு சந்தைப் படுத்த துணை நிற்பது. இணைந்து சந்தைப்படுத்தவும் வழிவகைகளை உருவாக்குவது

♦தொழில் முனைவோர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுவது

♦இயற்கை விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்துவது . தொழில் நுட்ப பயிற்சியளிப்பது

♦இயற்கை விவசாயதை பெருக்க பரப்புரை செய்வது

உறுப்பினர்கள் : மக்கள் நலச் சந்தையில் தொடர்புடைய இயற்கை விவசாய தொழில் முனைவோர்களாக உள்ள பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக இணையலாம். பதிவுக் கட்டணம் ரூ 1000 ( ஒரு முறை மட்டும்)

கூட்டம்: மக்கள் நலச் சந்தையின் மாதாந்திரச் சந்தையில் நடைபெறும்.

செயல்பாடுகள் : உற்பத்தி தனி நபர்களாக தற்போது போலவே செய்வார்கள். வாய்ப்புள்ளவர்கள் கூட்டாகவும் ஈடுபடலாம்.

விற்பனையும் தற்போது போலவே தாங்களே விற்பனை செய்வார்கள் . சில கூட்டு முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள்.

மக்கள் நலச் சந்தையின் அங்கமாக செயல்படும்.


மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் திரு கு.செந்தமிழ் செல்வன் ( 9443032436)

மண் நல மையம்

(மண் நலமே மக்கள் நலம்)


அன்புடையீர் , வணக்கம்..!

நமது விளைநிலங்களைப்பற்றி மண் வளத்தினைப்பற்றி நாம் சித்திக்க வேண்டிய தருணம் இது.

தொடர்ந்த இரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டினால் நிலத்தின் நுண்ணுயிர்கள் அழிந்து விவசாயத்திற்கே தகுதியற்றதாக மாறியுள்ளது. விவசாயிகள் கடன்காரர்களாக விவசாயத்தைவிட்டே வெளியேறி வருகிறார்கள். இரசாயன நச்சு கலந்த உணவு, மக்களுக்கு புற்று நோய், சக்கரை நோய், இரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை போன்ற பல நோய்களுக்கு காரணமாகிறது. சுற்றுச் சூழலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

விவசாயிகள் கால்நடைகள் மற்றும் மக்களைக் காக்க நமது மண் வளத்தினை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இயற்கைவிவசாயம் அதற்கான ஒரு நம்பிக்கை ஒளியினைத் தருகிறது அதனை முன்னெடுக்கும் முயற்சியே, “ மண் நல மையம்” .

மண் நல மையத்தின் அடிப்படை நோக்கங்கள்.

♦ பொது மக்களிடம் இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது

♦இயற்கை விவசாயம், இயல்பானது, இலாபகரமானது, எளியமையானது, செலவுகள் குறைவானது, சுயசார்பானது என்பதை விவசாயிகளிடம் விளக்குவது. தேவையான பயிற்சிகள் மூலம் இயற்கை விவசாயம் குறித்து தெளிவும் நம்பிக்கையும் விவசாயிகளுக்கு அளிப்பது

♦இயற்கை உரங்கள் ,பூச்சி விரட்டிகள் தயாரிப்பது குறித்த பயிற்சிகளை தருவது. தேவையான இடுபொருட்கள் மற்றும் பிற தேவைகளுக்கு துணை நிற்பது

♦ விவசாயக் கல்வி அளிப்பது. விவசாய அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது. விவசாய நூலகங்களை உருவாக்குவது

♦அரசுக்கும் விவசாயிகளுக்கும் பாலமாக துணை நிற்பது. அரசு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவது.

♦திட்டமிட்ட விவசாயத்தை அறிமுகம் செய்து ஒவ்வொரு நிலத்திற்கான செயல்திட்டம் உருவாக்கித்தருவது.

♦விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து தொழில்முனையங்கள் பெருக்கச் செய்வது

♦இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் உற்பத்திகளுக்கான நேரிடை விற்பனை மையங்கள் உருவாக்குவது

♦இயற்கை வளங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு அளிப்பது

♦கிராம விவசாயிகள் மையம்: ஒரு கிராமத்தினை மையமாகக் கொண்டு சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழிகாட்டி மையமாக இயங்கும். இதனை அதே பகுதியினச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுத்துவார். பயிற்சி, இடுபொருட்கள் பிற உதவிகள் இங்கு கிடைக்கும்

இயற்கை விவசாயத்தில் ஏற்கனவே ஈடுபட்டு செய்துவருபவர்களும் சமூக நோக்குக் கொண்டவர்களுக்கான தளம் இது. கிராம ஒருங்கிணைப்பாளர்கள், கருத்தாளர்கள் மற்றும் ஆர்வாலர்கள் ஆகிய மூன்று நிலைகளில் ஆர்வமானவர்கள் இணையலாம்

♦கிராம ஒருங்கிணைப்பாளர்கள் கிராம ஒருங்கிணைப்பாளர் அவரது பகுதியில் விவசாயிகளை திரட்டி பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு செய்வார்கள்

♦கருத்தாளர்கள்: ஏற்கன்வே இயற்கை விவசாயத்தில் அனுபவம் கொண்டவர்களாக இருக்கலாம் விவசாய கல்வி பயின்றவர்களாக இருக்கலாம். அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் தரவேண்டும் தானும் அவ்வப்போது பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

♦ஆர்வலர்கள்: இயற்கை விவசாயத்தினை விரிவு படுத்துவதில் அக்கறை கொண்டவர்கள் இணையலாம். இவர்கள் விழிப்புணர்வு தருவது, விவசாயிகளுக்கு உதவுவது, தொழில் முனைவோராவது, விற்பனைக்கு உதவுவது என பல நிலைகளில் மண் நல மையத்துடன் கிராமம் , மாவட்ட அளவில் இணைந்து செயலாற்றலாம்

நிர்வாகம் :
♦மண் நல மையம் என்கிற பெயரில் வேலூரைத் தலைமையிடமாக கொண்டுச் செயல்படும். தன்னார்வத்தை அடிப்படியாகக் கொண்டு இயங்கும். விவசாயத்தில் அறிவியல் பூர்வமான அணுகு முறையுடன் இயங்கும்

♦வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் கிராம ஒருங்கிணைப்பாளர், கருத்தாளர் மற்றும் ஆர்வலர்களாக இணைய விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு : கு.செந்தமிழ் செல்வன், 9443032436 ஒருங்கிணைப்பாளர், மண் நல மையம்.