கிராமத்து விளையாட்டு
(விளையாட்டில் மூழ்க)
“லீவுவிட்டாச்சா, வால அவுத்து விட்டாச்சா”
விடுமுறையில் வளர்ந்துவிடும் “வால்” பற்றியஅச்சத்துடன்அப்பா..
”டிவி, யுடியூப்பில் மூழ்கப் போறாங்க“ அங்கலாய்தார் அம்மா.
“கிராமத்துக்கு போகலாமே”
பாட்டி முன்மொழிந்து கொண்டே தாத்தாவைப் பார்த்தார்.
தாத்தா அதற்குள் கிராமத்துக்கே போய் விட்டார்.
குழந்தைகள் இருவரும் தாத்தாவை உலுக்கினார்கள்.
“தாத்தா, உங்களுக்கு லீவு விட்ட போது என்ன செய்தீங்க” பேரனின் கேள்வி.
“உங்க அம்மா, அப்பாவும் இப்படித்தான் லீவுவிட்டா அலரினார்களா?” விவரத்துடன் பேத்தி.
யாராவது தனது வாழ்ந்த நாட்களைப் பற்றி கேட்க மாட்டார்களா என தவித்துக் கொண்டிருந்த தாத்தாவின் நினைவலைகள் வேகமாக வீசத் தொடங்கியது.
முதலில் சிரித்தார்.
“அப்போதும் லீவுவிட்டால் அலறுவார்கள். ஆனால், எங்க அப்பா, அம்மா அல்ல” தாத்தா துவங்கினார்.
“பின்ன யார் அலருவார்கள்? ; மருமகள்.
“கிணற்றுக்காரர்கள். ஊரிலுள்ள பெரிய பெரியகிணற்றுகார்கள்.”
“ஏன், ஏன்?” ஆவலுடன் மகன்.
“லீவுவிட்டால் கிணறுகளில் தான் விழுந்து கிடப்போம். எங்களது பட்டாளம் ஒன்னா சேர்ந்தா கிணறே தூசாயிடும். தும்தும் என்று மேலிருந்து குதிப்போம்.
கிணறே அதிர்ச்சி கண்டு விடும். கிணற்றுக்காரர் அலறுவார்”
“தாத்தா, உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” பேரனின் ஆச்சரிய கேள்வி.
“எனக்கு மட்டுமில்ல ஊரிலிருந்த எல்லா பையன்களுக்கும் நீச்சல் தெரியும்.”
“பொம்பள பிள்ளைகளுக்கு நீச்சலும் கிடையாது” சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி பாட்டி செருகினார்.
தாத்தா தனது வேகத்தில் இதன் அர்த்தத்தை புரிந்து
கொள்ளாமல் தொடர்ந்தார்.
“ நாங்க எவ்வளவு உயரித்திலிருந்தும் குதிப்போம். படிகட்டின் மேலிருந்து, கிணற்றின் மேலிருந்து, செட்டின் மேலிருந்து என
உயர்ந்து கொண்டே போகும்.
பொம்ள பிள்ளங்க பார்த்தாங்க என்றால் அசந்து போவார்கள்”
“அவர்கள் அசந்து போகத்தானே உயர உயர குதிப்பீங்க” பாட்டியின் நக்கல்.
“தாத்தா,
நாங்கப் பார்த்த தெல்லாம் சின்ன சின்ன கிணறுகள், அதில் எப்படி குதிக்க முடியும்” பேத்தியின் யதார்த்தமான கேள்வி.
“பாசன கிணறுகள் பெரியதாக இருக்கும்.
துணிகளும் துவைத்து எடுத்துச் செல்வார்கள். ”தாத்தா கிணறுகளைப் பற்றித் தெரிவித்தார்.
“தாத்தா, எவ்வளவு நேரம் கிணற்றில் நீந்துவீர்கள்”
சிலநேரங்களில் பக்கத்தில் பனமரங்கள் இருக்கும். அதிலிருந்து பனங்காய் அறுத்து வாயால் கிழித்தே நுங்கு சாப்பிடுவோம். நீச்சல் தொடரும்.
சில
நேரங்களில் விளையாட்டில் தகறாறு ஏற்பட்டு கரையேறுவோம்.”
“ என்னது. நீச்சலில் விளையாட்டா?” பேரனின் கேள்வி
“நிறைய விளையாட்டு. எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் விளையாட்டுகள் மாறும்.
”தாத்தா “சிலத சொல்லுங்களேன்”
பாட்டி “
தண்ணிக்குள் யார் அதிக நேரம் மூச்சுப் பிடிக்கிறார்கள் என்பது மிகச் சாதாரண விளையாட்டு.
தாண்ணீருக்குள்ளேயே செய்வதாகவும் விளையாட்டுகள் இருக்கும்.
நீரில் மூழ்கிக் கொண்டே கிணற்றைச் சுற்றி வரவேணும். தண்ணீரும் மிகவும் தெளிவாக இருக்கும் உள்ளே ஆள்இருப்பது மட்டுமல்ல குச்சி போன்ற சின்னப் பொருளும் தெரியும்.
குச்சியினை கிணற்றின் அடியில் வைத்துவிட்டு ஒருவர் வருவார்.
குச்சி வெளியே வரும் வரை கூட காத்திருக்க மாட்டார்கள். உள்ளே மூழ்கி குச்சி எங்கே சென்றாலும்
எடுத்து வந்து விடுவார்கள்.
சில நேரங்களில் தண்ணீர் 30’- 40’ ஆழத்திற்கும் இருக்கும். அவ்வளவு ஆழத்திற்கு மூச்சு பிடித்துச் சென்று அடிமண்ணை எடுத்து வர வேண்டும். யார் முதலில் எடுத்து வருகிறார்
என்பது தான் போட்டி”.
“வெறும் நீச்சல் என்று தான் நினைத்தோம். ஆனால், ஆபத்தான விளையாட்டுகளாக இருக்கும் போல உள்ளதே. விபத்துக்கள் நடந்துள்ளதா?’ மகன்
“நிறைய இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு நண்பன் தண்ணீர் குறைவாக இருக்கும் போது உள்குத்து போட்டார். தலை நேராக தண்ணீரில் பாய்ந்தது. அந்த கிணற்றில் தண்ணீரும்
குறைவாக இருந்தது, அடியில் சேறு இரண்டு மூன்று அடிக்குமேல் இருந்தது. அதனால் தலை அந்தச் சேற்றில் புதைந்து கொண்டது. அவனை உயிரோடு மீட்க முடியவில்லை..
கண் நோய்களும் வரும். கண் எவ்வளவு சிவந்திருக்கிறது என்பதை வைத்து எவ்வளவு நேரம் கிணற்றில் இருந்தோம் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.
உயரத்திலிருந்து
குதித்து பலபேருக்கு விரைவீக்கம் ஏற்படும். விரைபலமாக தாக்கி ஒருவன் இறந்தும் இருக்கிறான். ஆனால், இவை எதுவும் நீச்சல் ஆர்வத்தை அழிக்கவில்லை. அவைகள் எங்களுக்கான
எச்சரிக்கையாக வரும். கொங்சநாள் அச்சம் தாலைகாட்டும். சில நாளில் போய் விடும்” தாத்தா தளராமல் தொடர்ந்தார்.
“வெளியூரிலிருந்து செல்லும் நண்பர்களுக்கு நீச்சல் சொல்லித் தருவீர்களா?”
தாத்தா பலமாகச் சிரித்தார்.
“அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தருவதும் எங்களுக்கு ஒரு விளையாட்டே. நீச்சல் தெரியாமல் யாராவது வந்தால் எங்களுக்கு நல்லபொழுது போக்கு.
அவர்களை கிணற்றின் கரையில் அமர்ந்து பார்க்கச் சொல்வோம். அவர் சுவாரிசமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது கிணற்றில் தள்ளி விடுவோம்”.
“அய்ய்ய்யோ. நீரில் மூழ்கி விட்டால்” பயத்துடன் பேத்தி.
“நீரில் குதித்துதான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். படம் பார்த்தா கற்றுக் கொள்ள முடியும்? தத்துவமாய் பேரன்.
“குதித்தால் தண்ணீரின் மேலே வந்துதான் ஆகணும்.
மேலே வந்தா குடுமி எங்கள் கையில் தான்.
அவர்கள் குய்யோ முய்யோ என்று கத்தி மூச்சு திணறுவார்கள். யாரேனும்
ஒருவர் முதலிலேயே அவரை கீழிருந்து தாங்கிப் பிடிப்பார்கள். அவரின் பயம் தெளியும்வரை தண்ணீரேலே இருப்பார். இப்போது பாதிநீச்சல் வந்து விடும்.
அப்புறமென்ன,
அவரே மறுநாள் தண்ணீருக்கு வந்து விடுவார். ஊருக்கு திரும்பும் போது நீச்சல் வீரராகத் திரும்புவார்.”
“தாத்தா, நான் நீச்சல் கற்றுக் கொள்ள ரெடி” பேரன் தயாராகி விட்டான்.
“அதுசரி அப்பா, இப்ப கிணறுகள் அப்படியுள்ளனவா? தண்ணீர் இருக்குமா?
சிறார் பட்டாளம்
இருக்குமா? நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போதே கிணறுகள் வர்றி வந்தனவே”
“இப்போ கிணற்கள் ஏது?. கிணறுகள் எல்லாம் வற்றி விட்டன. வரண்ட குளத்து மீனாக
சிறார்களும் கிணற்றுக்காக தவித்தார்கள்.
எங்கோ சில கிணறுகள் இன்றும் உள்ளன”.
“நீச்சல் தவிற என்ன விளையாடுவீர்கள்”.
“நிறைய விளையாடுவோம். அதற்கெல்லாம் விடுமுறை வரை காத்திருப்பதில்லை. தினந்தோறும் விளையாடுவோம். புத்தகம் மற்றும் நோட்டின் வேலை பள்ளியோடு சரி.
வீட்டுப்பாடம் எல்லாம் கிடையாது.
இரவிலும் திருடன் போலீஸ் விளையாடுவோம். யாராவது குழந்தை விளையாட வில்லையென்றால் உடம்பு சரியில்லையா என விசாரிப்பார்கள்.
பள்ளியிலும் விளையாட்டு பிரியடில் கண்டிப்பாக விளையாடுவோம். விளையாட்டு எங்கள் உயிர் மூச்சாக இருந்தது.
படிப்பு என்பதும் விளையாட்டின் இடையில் ஒரு
இயல்பான செயலாக இருந்தது”.
அப்படி என்ன தான் விளையாடினீர்கள்.
“கோலி விளையாடுவோம். கோலி குண்டுகள் எப்போதும் எங்கள் பாக்கெட்டில் இருக்கும்.
பள்ளிபோகும் வழியிலும் நேரம் இருந்தால் புளியமரத்தடியில் குழிதோண்டி
விடுவோம். புல்-கோட்டி எல்லா தெருவிலும் காணும் காட்சியாக இருக்கும்.
சாப்ட்பால் ஒரு பாப்புலர் விளையாட்டாக பள்ளியிலும் கிராமத்திலும் நடக்கும்.
பம்பரம்
பலவடிவங்களில் நடைபெறும். சிகரேட் பெட்டியில் மேல்கீழ் அட்டைகளைச் சேகரித்து வைத்து கொள்வோம். இந்த அட்டைகளை வைத்து விளையாடி சேர்ப்போம். அப்போது
பணத்தைவிட இந்த அட்டைகள் எங்களுக்கு மதிப்பு மிக்கதாக இருக்கும்.’
“ கேர்ல்ஸ்டூடன்ட் விளையாடவே மாட்டார்களா?”
“பெண் பிள்ளைகளும் விளையாடுவார்கள். ஆனால் எல்லோரும் ஸ்டூடன்ட் ஆக இருப்பதில்லை.
பெண் பிள்ளைகளுக்கென்று தனியான விளையாட்டுகள் உண்டு.
உள்ளரங்க விளையாட்டாக தாயம், ஆடு-புலி மற்றும் பல்லாங்குழி இருக்கும்.”
“இந்த விளையாட்டுகள் எல்லாம் இப்போதும் இருக்கின்றனவா? கிராமத்திற்கு போனால் விளையாட முடியுமா?”
“நிச்சயமாக. கிராமத்து மானவர்களும் பெரும்பாலும்
விடுமுறையில் தான் விளையாடுகிறார்கள்.”
இப்போது தாத்தா பாட்டியின் கைகளை நால்வரும் பிடித்துக் கொண்டு “கிராமத்துக்கு போகிறோம்.
பத்து நாள் தங்குகிறோம். விளையாடுகிறோம்.”
“ரொம்ப சந்தோஷம். அங்கு வரும் போது மறக்காம ஒன்று செய்ய வேண்டும்.
என்ன சொல்லுங்க”
எல்லோரும் முழித்துக் கொண்டிருக்கும் போது பாட்டி சொன்னார் “ செல்போனை சென்னையிலேயே விட்டு விட்டு வர வேண்டும்”
நாற்பது ஆண்டு வாழ்வில் தன்னைப் புரிந்து கொண்ட பாட்டியைப் பார்த்து கொண்டே தாத்தா சொன்னார் “மிகச்சரி. அப்போது தான்.
செல்லில் மூழ்காமல் சொல்லியதில்
மூழ்குவோம்”